ஆன்லைனில் புத்தகம் வாங்க

Thursday 28 November 2013

போட்டிச்சிறுகதை-5

சிறுகதை-சமிக்ஞை


பேச்சரவம் முற்றிலும் நின்று போன கிராமத்தில் மனிதர்களின் இயக்கம்  ஊரெங்கும் வியாபித்திருக்கும் கருவேலங்காடுகளை மையமாய் வைத்தே சுழன்று கொண்டிருந்தது. கூர்மையான முட்களையுடைய கிளைகளின் மூலம் காற்றின் ஈரத்தையும் மிச்சம் வைக்காமல் உறிஞ்சிக் கொண்ட அம்மரங்கள், சதா வெக்கையை கக்கிக் கொண்டிருந்தன. முன்பு செழிப்பாய் இருந்த காலத்தில் நெல் போட்டு அறுத்த நன்செய் நிலங்கள் ஓய்வெடுக்கும் பருவங்களிலும், மழை பொய்த்துப் பெருதானியங்கள் தோற்று பஞ்சம் எட்டிப் பார்க்கும் கடும் பொழுதுகளிலும் கூட பெருமுயற்சிகளோ முதலீடுகளோ இன்றி சிறுதாணியங்கள் விளைவித்துத் தந்து குடி காத்த புன்செய் நிலங்களும், இப்போது கருவேலங்காடாய் மாறிக் கிடந்தன.

கருவேலம் மரங்களை வெட்டி விறகாக்கி அவற்றை எரித்து கரிமூட்டமிட்டு நகரங்களுக்கு ஏற்றிச் செல்லும் லாரிகள் வரத்துவங்கிய முதல் நாளன்று மறைந்து போன சிட்டுக்குருவிகளை அதன் பின் எப்போதும் அந்த கிராமத்தில் காணமுடியவில்லை. ஊரை அடைத்துக் கொண்டிருந்த கருவேல மரங்கள் கரிக்கட்டைகளாய் மாறிக் கொண்டிருக்கையில், காற்றின் பரப்புகளில் எல்லாம் கரித்துகளின் நெடி முழுமையாய் போர்த்திச் செல்ல துவங்கியிருந்தது. குத்துயிராய் போராடிக் கொண்டிருந்த ஒரு சில நிலங்களும் அடுத்தடுத்த மகசூல்களில் சாவிகளை பெற்றெடுத்து, தாங்கள் தற்கொலை செய்து கொண்டதை சொல்லிவிட்டுத்தான் மரித்தன என்றாலும் அதனை உணர்ந்து கொள்ளும் நிலையில் குடியானவர்கள் இல்லை. மாறாக நிமித்தப் போக்கைக் காட்டி எச்சரித்த அயலூர்க்காரர்களையும் விரக்தியுடன் விரட்டியடித்தனர். ஊரெங்கும் பரவியிருந்த கரித்துகள்கள், காலம் தப்பியேனும் பெய்யும் சில பருவமழைகளையும் உள்ளே வரவிடாமல் மூடி போட்டு விட்டன. அதன் பின் ஊரின் விளைநிலங்களையெல்லாம் மொத்தமாய் சுடுகாடாய் மாற்றி எப்போதும் பிணங்களற்ற கட்டைகளை எரித்து கரியாக்கும் நிகழ்வுகள் தாம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

அழிந்து கொண்டிருக்கும் ஊருக்கான சகல சமிக்ஞைகளும் கனவில் தெரியத் தொடங்கிய நாளில் கிராமத்து வயசாளிகளின் தூக்கம் முற்றிலுமாய் அற்றுப் போனது. அவர்கள் இரவைக் குடித்தபடி ஊளையிடும் நாய்களுக்கு காவல் இருக்கத் துவங்கி ஆண்டுகள் பல ஆகிவிட்டன. தவறியும் கண்ணசரும் அதிகாலைப் பொழுதுகளில் கொடுங்கனவுகளின் வதைக்கும் நிழற்படங்கள், தாங்கள் அனுபவிக்கும் நரகம் இன்னும் விரியப் போகிறது என்பது போலவும் மரணத்திற்கும் தங்களுக்குமான தூரம், நாவரண்டு தேடியலையும் போது கண்கட்டு வித்தை காட்டும் கானல்நீரைப் போலவும், நுரையீரல் துடிக்க தொடர்ந்து ஓடி எட்டிப்பிடிக்க முயலும் தொடுவானம் போலவும் துன்புறுத்தின. முன்பொரு காலத்தில் மிளகாய்ச்செடிக்குக் களையெடுக்கையில் கையில் பட்ட தளிரைப் பத்திரப்படுத்தி தனி பக்குவம் பார்த்து, வயிற்றுப் பாட்டுக்கு கொண்டு சென்ற நீராகாரத்தைக்கூட ஆசையாய் அதன் மீது உமிழ்ந்து வளர்த்தெடுத்து, அது விருவிருவென வளர்ந்து இரண்டொரு ஆண்டுகளில் அத்துவான பொட்டக்காட்டில் குடைபிடித்து நிற்கும் ஒற்றை மாமரமாக சிரித்திருந்ததையும், அரசங்குட்டியை விடவும் வேப்பங்கன்று தடித்திருக்கிறது என்று அரசுக்கு தனி எருகிட்டு அது சத்துப் பிடித்ததும் இரண்டையும் பிணைத்து விட்டு விழாக்காலங்களில் வழிபாட்டிற்காயும், வேலை முடித்த காலங்களில் இளைப்பாறுதலுக்குமாய் பயன்படுத்திய கதையையும், இன்னும் அதுபோன்ற பலநூறு நினைவுகளையும் செறிக்கவும் முடியாமல் ஞாபக இடுக்குகளில் தொலைக்கவும் முடியாமல் திணறிக் கொண்டிருந்தனர்.

அயல்தேசத்தைவை போல தோற்றங்கொண்ட பறவைகளின் பெருங்கூட்டம் வரண்டு கிடக்கும் ஊரணியின் கருவேலம் மரங்களில் அடைந்திருந்த விடிகாலைப் பொழுது வேறு மாதிரியாக தோற்றங்கொண்டிருந்தது. ஊரைப் பிடித்திருந்த கிரகணம் விடுபடுவதற்கான அறிகுறி என்றும் அந்தப் பறவைகள் தங்களுடன் கருமேகங்களைக் கொண்டு வந்திருப்பவை என்றும் அவை மழையாய் பொழிந்து ஊரின் கரிய முகமூடி கிழிக்கப்படும் என்றும் நம்பிக்கைகள் துளிர்விடத்துவங்கின. அந்தப்பறவைகளும் வந்தது முதல், மயான அமைதியில் ஆண்டாண்டுகளாய் உறைந்திருந்த கிராமத்தை தங்களது ஓயாத சத்தத்தினால் கொத்தியவாறு இருந்தன. அவை இனப்பெருக்கம் செய்வதற்கான சூழலை அந்த கிராமத்து தட்பவெப்பத்தில் உணர்ந்திருக்கின்றன என்று தோன்றும் படியாக கருவேலம்மரங்களின் கிளைகளெங்கும் கூடுகள் கட்டுவதற்கான முனைப்பில் இருந்தன. நீர்க்குளியல் இல்லாத பொழுது தங்கள் உடலின் சூட்டைத் தனித்துக் கொள்ள மண்குளியலெடுப்பதை வழக்கமாய் கொண்டிருந்த அந்தப் பறவைகள் ஊரெங்கும் படர்ந்திருக்கும் கரிய மண்ணைப் பார்த்து திகைத்தன. பின் அந்த நிறம் தான் அந்த மண்ணின் இயல்பு என்ற எண்ணங்கொண்டவைகளாய் நீண்டு கூர்மையாய் இருக்கும் தங்கள் கால் நகங்களால் மண்ணை பறிக்க ஆரம்பித்தன.

காலையில் வெள்ளை நிறமாய் கருவேலமெங்கும் படர்ந்திருந்த பறவைக்கூட்டத்தைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சும், அடக்கவியலா ஆர்வமும் கொண்டிருந்த அவ்வூர் மக்கள், மாலைப்பொழுது சாய்கையில் அவை ஊரணி மரங்களில் அடைந்து கொண்டிருப்பதைக் கண்டு உடல் வியர்ப்பதும் கால் தடுமாறுவதுமாக முற்றிலும் அதிர்ந்தனர். தங்களுக்கான விடியல் ஒரு போதும் வரப்போவதில்லை, தற்பொழுது பார்ப்பது இனி வரும் காலங்களில் தாங்கள் எதிர் கொள்ள வேண்டிய கோர நிகழ்வுகளின் இன்னொரு காட்சிப் படிமம் தான் என்பதை உணர்ந்து தலை கவிழ்ந்தவாறு தத்தம் வீடுகளை நோக்கிச் சென்றனர். அது பற்றி அனைத்தும் அறிந்தோ இல்லை எதுவும் அறியாமலோ பெரும்சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தன இறகுகள், சிறகுகள் என உடல் முழுதும் கரியப்பிய பிசுபிசுப்பில், காலனைப் போன்று கொடூரமாய் காட்சியளித்த அப்பறவைகள்.

நாட்கள் செல்லச் செல்ல அந்தப்பறவைகள் இருக்கும் பகுதியில் இருந்து கொடிய துர்நாற்றம் வீசுத்துவங்கியது, அந்தப்பறவைகளின் சத்தம் நாராசமாய் ஒலிப்பது போலிருந்தது. அது எப்போதும் மரண ஒலத்தை ஒத்திருப்பதாக உணர்ந்த மக்கள், அவற்றை தங்கள் ஊரிலிருந்து விரட்டியடிப்பதற்கான முடிவினை எடுத்தனர். மறுநாள் விடியலில் ஊரணியின் கருவேலங்களை வெட்டி, விறகைத் தீயிட்டு கரிமூட்டமிட வேண்டும் எனவும் நெருப்புக்குப் பயந்து அந்தப் பறவைகள் மீண்டும் அங்கோ சுற்றுப் புறத்தில் வேறு எங்குமோ தங்காது என்றும் தங்களுக்குள் தீர்மாணித்த தினத்தின் நள்ளிரவில் கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஆயிரக்கணக்கான கரப்பான் பூச்சிகள் படையெடுத்து வந்து வீட்டின் உட்புற பரண்களிலும், படுக்கைகளுக்கு அடியிலும் உரி கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும் தாழிகளிலும் குடுவைகளிலும், அடுப்படிகளிலும், கொட்டில்களிலும் ஆக்கிரமிக்கத் துவங்கின. குடியானவர்கள் மயக்கம் கொண்டவர்களைப் போல உறங்கிக் கொண்டிருக்க, திண்ணையில் வெறித்தபடி அதனைக் கண்ணுற்ற முதியவர்கள் இனி வேறு மாதிரியான நரகம் காத்திருக்கிறது என்றும் அது ஜென்ம ஜென்மத்திற்கும் தங்கள் சந்ததியினரைத் தொடரும் தொற்றாக இருக்கும் என்றும் உணரத் துவங்கினர். அவற்றை வாய் திறந்து சொல்லி சிறு எச்சரிக்கையாவது செய்யலாம் என்று எண்ணியவர்களின் நினைவும் சொல்லும் வெவ்வேறாய் பிரிந்து அவர்கள் அது வரை காத்துவந்த அத்தனை மௌனத்திற்கும் சேர்த்து மொத்தமாய் பெருங்குரலெடுத்து கத்தத் துவங்கினர். அது மனம் பிறழ்ந்தவர்களின் கூச்சலாக வெளி வந்தது.

முன்பொரு காலத்தில் சம்சாரியாய் இருந்தவர்களாதலால், பறவைக்கூடுகளை முட்டைகளோடும் குஞ்சுகளோடும் எரிப்பதற்கு அவர்களுக்கு மனம் வரவில்லை. எனவே பறவைகளை முதலில் அப்புறப்படுத்தி விட்டு குஞ்சுகளை பெருவலி ஏற்படா வண்ணம் கொன்று புதைக்க முடிவெடுத்தனர். அவ்வாறே, கரிப்பிடித்து கோர உருவம் கொண்டு அழிவின் முன்னோட்டமாய் தோற்றம் கொண்டிருந்த பறவைகளை நெருப்புப் பந்தங்களைக் காட்டி விரட்டி விட்டு கூடுகளை அடைந்தனர். அங்கே கடின ஓடில்லாமல் மெல்லிய தொலியுடன் கூடிய முட்டைகளையே அந்தப்பறவைகள் பெரும்பாலும் இட்டிருப்பதையும் அவையும் அடைகாக்கப்படும் பக்குவம் முழுவதும் இல்லாமல் பாதி அடையில் தொலி கிழிந்து கருச்சிதைவான பிண்டங்களாய் கூடுகள் தோறும் நிறைந்திருப்பதைக் கண்டனர். அப்படியும் தப்பிப் பிறந்த குஞ்சுகள் அனைத்தும் அங்ககீனமாய் விகாரமாய் காட்சியளித்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். அங்கே வீசிய துர்நாற்றம் தங்கள் மயக்கமடையச் செய்யும் என்று தோன்றவே உடனடியாக அங்கிருந்து வெளியேறினர். அந்தப்பறவைகளின் பிணி குறித்து அச்சம் கொண்டு வெளிறிய பார்வையுடன் தலை கவிழ்ந்து நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்தை நோக்கி முத்திரையிட்ட வாகனமொன்று மணியொலிக்க வந்தது.


விவசாயம் பொய்த்துப் போய் பஞ்சம் பிழைக்கவும் வழியின்றி தவித்துக் கொண்டிருக்கும் மக்களின் நிலங்களை எடுத்துக் கொண்டு அனைவருக்கும் நிரந்தர வேலை கிடைக்குமென்ற உறுதிப்பத்திரம் வாசிக்கப்பட்ட நாளில் நீண்ட யுகங்களுக்குப் பிறகு தங்களுக்கான காலம் மீண்டும் வந்திருப்பதாகவே அவர்கள் மனதார நம்பினர். ஒப்பங்களிட்டு தாரை வார்த்துவிட்டுநாளது தேதியில் சம்பளத்துடன், பயணப்படியும், பஞ்சப்படியும் கிடைப்பது பற்றி அவர்கள் கனவு கண்டு கொண்டிருக்கையில் இரண்டு உலைகள் நிறுவதற்கான வரைவுகளுடன் அரசாங்க இயந்திரம் தன் இரும்புக் கரங்களைப் பதித்து வானம் தோண்ட பள்ளம் பறிக்க, அது காற்று வெளியெங்கும் கரிய நெடியை புழுதி வாறித் தூற்றியது.