ஆன்லைனில் புத்தகம் வாங்க

Tuesday 7 January 2014

போட்டிச் சிறுகதை 83

                                                                               கலா மிட்டாய்க்கடை


இன்னைக்கு வரட்டும் அவனை பிடிச்சு எங்கடா போயிட்டு வர நாயேன்னு கேட்டுவிட வேண்டும் என்ற முடிவோடு இருந்தாள் கலா.
நான் நாள்பூரா உழைச்சு கஷ்டப்பட்டு ஸ்கூலுக்கும் டியூஷனுக்கும் அனுப்பி வச்சா எங்கபோய் ஊர் சுத்திட்டு வர்றான் இந்த பய எனப் புலம்பிக்கொண்டிருந்தாள் அவள்.இன்று மண்ணெண்ணெய் வாங்கிவிட்டு மணிவண்ணன் வீட்டு வழியாக வந்த போதுதான் அவளுக்கு ரகு கடந்த 1 வாரமாக ஸ்கூலுக்கும் டியூஷனுக்கும் போகாதது தெரியவந்தது.

ரகு.கலாவிற்கென்று உள்ள ஒரே சொத்து,சொந்தம் எல்லாம் இவன்தான்.புஷ்பராஜைக் காதலித்து இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி ஊர்விட்டு ஊர்வந்து,வேலையில்லாமல் பலமாதங்கள் பட்டினியில் வாடி,புஷ்பராஜை சாலை விபத்தில் பறிகொடுத்து,இவள் வீதிக்கு வந்து பலவீட்டில் வீட்டுவேலை செய்து,சித்தாளாக வேலைபார்த்து இந்த இருபது வருடத்தில் அவள் தவமிருந்து பெற்ற மகன் ரகு.
ஒருநிமிடம் அவள் தன்வீட்டை சுற்றிப் பார்த்தாள்.கரையான் சாப்பிட்டு மிச்சம் வைத்த கூரைகள்,கோணித்திரை கதவு,அதில் வெளிச்சம் வர வேண்டும் என்பதற்காகவோ என்னவோ அத்தனை ஓட்டைகள்,ஒரு கண்பார்வையிலேயே அளந்துவிடும் அளவிற்கு படுக்கையறை,சமையலறை,பூஜையறை எல்லாமே அவளுக்கு அந்த 1௦ அடி வீடு தான்.கணவனுடன் வாழ்ந்த 5 வருடத்தில் சம்பாதித்தது இவ்வளவுதான்.

அவள் கணவன் இறந்தபோது கூட சொந்தமென்று ஒருவரும் வரவில்லை. ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து விட்டார்களாம்.இவர்கள் என்ன என்னை ஒதுக்கிவைப்பது நான் அவர்களை ஒதுக்கிவைக்கிறேன் என உள்ளுக்குள் நினைத்துக் கொள்வாள்.நான் சாவதற்குள் என்றாவது ஒருநாள் அந்த ஊருக்குள் கௌரவத்துடன் நுழைய வேண்டும் என்பதில் வைராக்கியமாக இருந்தாள்.அதனால்தான் தான்படும் கஷ்டத்திலும் மகனை பள்ளிக்கு அனுப்பிவைத்து போதாதற்கு தற்போது டியுஷன் வேறு.இந்த வைராக்கியமும்,ரகுவும் மட்டும் இல்லையென்றால் தன் கணவன் புஷ்பராஜ் இறந்தபோதே இவளும் இறந்திருப்பாள்,சாவதற்கு இங்கு வழியா இல்லை.
மணி 7ஐ கடந்தபோது வீட்டிற்குள் நுழைந்தான் ரகு.

எங்கடா போயிட்டு வர?,படித்திருந்த கலா எழுந்து தலையை முடிந்தவாறே ரகுவைக் கேட்டாள்.
என்ன புதுசா இருக்கு,ஸ்கூலுக்கு போயிட்டு மேலத்தெருவுல டியுஷன் போயிட்டு வரேனாக்கும் என்றான் சாதாரணமாக.
பக்கத்திலிருந்த விலக்கமாறினை எடுத்து பளார் பளார் என அடித்தபடியே எங்கடா போனநாயே? சொல்லுடா என்றாள் கோபமாக.

இதை சற்றும் எதிர்பார்க்காத ரகுவிற்கு தலைமுழுதும் விலக்கமாறு குச்சிகள் சொருகியிருந்தது.
இத்தனை அடித்தும் இவன் பதில் ஏதும் பேசாதது கலாவிற்கு மேலும் கோபத்தை உண்டாக்கியது.குடிசையின் மரஆணியில் மாட்டியிருந்த பிள்ளையாரைப் பார்த்தபடியே அழத் தொடங்கிவிட்டாள் ஏன் சாமி எனக்கு மட்டும் இப்படி நடக்குது?இவன் ஒழுங்கா படிச்சு என்னைய விரட்டுன ஊருக்குள்ள தலை நிமிர்ந்து போகலாம்ன்னு கனவெல்லாம் கண்டேனே,என் கண் முன்னாடியே அத வெட்டி பொதச்சிட்டானே இந்த பய,என் இரத்தத்தை உருக்கி இவனை படிக்க அனுப்புனா இவன் எங்கேயோ ஊர் சுத்திட்டு இப்படி அலையுறானே.எனக்கு இருந்த ஒருநம்பிக்கையும் போச்சு.இனிமே எனக்கு எதுக்கு இந்த உசுரு நீயே எடுத்துக்கோ.நீயே எடுத்துக்கோ,என்று தலையில் அடித்தபடியே அழுதுகொண்டிருந்தாள்.

ரகுவிற்கும் அழுகை வந்தது,அவனுக்கு மட்டும் அம்மாவை அழ வைக்கவேண்டும் என்று ஆசையா என்ன.!.நன்றாகத் தான் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தான் இவனும்.என்னைக்கு அந்த முருகேசன் சகவாசம் கிடைத்ததோ அன்றிலிருந்து தான் எல்லாம் மாறியது.முருகேசன் அவன் பள்ளியில் படிக்கும் மாணவர்களிலேயே பணக்காரன்.எப்போதும் பள்ளிக்கு மோட்டாரில் வந்து இறங்குவான்.ஒருநாள் பள்ளியில் முருகேசனை அடிக்க சிலர் துரத்தியபோது அவர்களை எல்லாம் அடித்துவிட்டு ரகுதான் காப்பாற்றினான்.அன்றிலிருந்து தான் அவர்களது நட்பு தொடங்கியது.

ரகுவிற்கு அவன் பணக்காரன் என்பதை தவிர வேறு எதுவும் தெரியாது.அவனாக எதுவும் கேட்கவும் இல்லை.அன்று துரத்தியவர்கள் தன்னிடம் பணம் திருட துரத்தியதாக அவன் கூறியிருந்தான்.முருகேசனது அந்த புல்லட் வண்டியைத் தொட்டுப்பார்க்க வேண்டும் என்பதே ரகுவிற்கு பலநாள் கனவாக இருந்தது.இப்போது அதேவண்டியில் ஒன்றாக சுற்றுவதை அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
முதலில் முருகேசனைப் பற்றி சொல்லவேண்டும்.5அடி உயரம் அதற்கேற்ற உடல்.பள்ளி மாணவன் என்பதற்கு அதிகமாக முகத்தில் மீசை,தாடியின் வருகைகள்.வலது கையில் ஆள்காட்டிவிரல்,நடுவிரல்,கட்டைவிரலில் பலவண்ண கல்பதித்த மோதிரங்கள்,கழுத்தில் இரண்டு தங்கச்சங்கிலி என பார்ப்பதற்கே மிராசுதார் போல இருப்பான்.

கடந்த ஒருவாரமாக ரகு பள்ளிக்கு ஒழுங்காகச் செல்லாததற்கும் காரணம் அவன்தான்.நண்பர்களான பிறகு தியேட்டர்,கோயில்,ஷாப்பிங் கடைகள் என ரகுவை அவன் செலவிலேயே அழைத்துச்சென்றிருக்கிறான் .ரகுவிற்கும் சிலசமயம் தோணும்.முருகேசனிடம் கேட்பான்.அதற்கெல்லாம் அவனது பதில் நீ என் பிரண்ட் டா.அப்படி அவன் அன்று அழைத்துச் சென்ற இடம் வீடியோகேம் ப்ளேசென்டர்.டிவியையே பார்த்திராதவனுக்கு அந்த இடம் ரொம்ப புதுமையாக இருந்தது,முதல்நாள் விளையாடியபோதே அது அவனை அடிமையாக்கிவிட்டது எனக் கூறலாம்.விளையாடி முடித்துவிட்டு அந்த இடத்தை விட்டுவெளியே வந்தவுடன் ரகு முருகேசனிடம் கேட்ட முதல்கேள்வியே,நாளைக்கு மறுபடியும் இங்கே வரலாமா?ப்ளீஸ்.

இந்த ஒருவாரகாலமாக அவன் ஸ்கூல் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை.ரங்கம்மா அக்கா கடையில காடை சாப்பிட்டேன் உடம்புக்கு ஒப்புக்கலை என பள்ளி நண்பர்களிடம் கதை சொல்லிவிட்டு முருகேசனுடன் தினமும் வீடியோகேம் வீடியோகேம் வீடியோகேம்.ரங்கம்மாவும் இப்போது ரகுவைத் தேடிக்கொண்டிருக்கிறாள் கொலைவெறியுடன்.

அழுதுகொண்டே கலா அந்த காலண்டர் மாட்டிய கம்பியிலேயே தலைவைத்து தூங்கிவிட்டாள்.மணி எத்தனை என கடிகாரத்தைப் பார்த்தபோது அது 3மணியுடன் நின்றிருந்தது.கழுத! இதுவொன்னு தபார் தபார்-ன்னு நின்னுபோயிடும் என கடிகாரத்தை திட்டிக்கொண்டே வெளியே வந்தாள்.

அக்கா ராணியக்கா மணி எத்தனைக்கா?

வீட்டின் உள்ளேயிருந்து 8.3௦ மணி என பதில் வந்தது.

ஐய்யோ!இந்த ரகு பயலுக்கு பசிக்குமே.பன்னிப்பய.டேய் ரகு எந்திரி சாப்பிட்டு தூங்கு என புத்தகமூட்டையை தலைக்கு மேல் வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தவனை தட்டி எழுப்பினாள்.

போ எனக்கொன்னும் வேணாம்,நீ பேசாம போ.

உடனே இவனுக்கு கோபம் பொத்துக்கிட்டு வந்துடும் அப்பனை மாதிரியே.என் ராசால,கத்திரிக்கா புளிக்குழம்பு வச்சிருக்கேன் ரெண்டு பருக்கை தின்னுட்டு தூங்குடா என கெஞ்சினாள்.

அதான் ஏதும் வேணாம்ன்னு சொல்றேன்ல என விசும்பினான் அவன்.

வேகமாக ரங்கம்மா கடைக்குச் சென்று அவனுக்கென்று நெய்தோசை வாங்கிவிட்டு கிளம்பினாள் கலா.நெய்தோசையைக் கண்டால் அவன் கோபமெல்லாம் பறந்துவிடும் என்பது கலாவிற்கு தெரியும்.முன்பெல்லாம் தோசை என்பதே அவர்களுக்கு காணக் கிடைக்காத ஒன்று.ஏதாவது தீபாவளி,பொங்கலுக்கு யாராவது கொடுத்தால் பரவாயில்லை என்ற நிலைதான்.இப்போது இந்த ரங்கம்மா கடை வந்ததிலிருந்து ரகுவிற்கு தோசை வாங்கிவிட்டு காசிற்கு பதிலாக ரங்கம்மாவின் வீட்டுவேலைகளை செய்துகொடுப்பாள்.இந்த 2 நெய்தோசைக்கு அவள் நாளைக்கு நாள்முழுதும் ரங்கம்மாவின் வீட்டில் வேலை செய்ய வேண்டியிருக்கும்.நல்லவேளை கடையில் ரங்கம்மா இல்லை,இருந்திருந்தால் தன்கடை காடையை சாப்பிட்டு உடம்புக்கு ஒப்புக்கலை என ரகு சொன்னதற்கு கலாவை பேய்பாடு 
படுத்தியிருப்பாள்.

வீட்டில் ரகு இன்னமும் படுத்துதான் கிடந்தான்.டக்கென்று கண்விழித்து தலையை தூக்கி பார்த்தான்,கண்டிப்பாக நெய் வாசம் அடித்திருக்க வேண்டும்.

ரகு தட்டை எடுத்துவைத்து அமைதியாக உட்காந்திருந்தான்.வீண் கோபத்துக்காக அவன் நெய்தோசையை விடவிரும்பவில்லை.கலாவும் அவன் சாப்பிடட்டும் என அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.அம்மா நீ சாப்பிடலையே என தோசையை நீட்டினான் ரகு.
எனக்கு வேணாம் ராசா,என்னமோ நீதான் இத ரசிச்சு தின்னுற,எனக்கு இந்தவாடையே பிடிக்கல.வாயாண்ட கொண்டுபோகும்போதே கொமட்டுது.நீ தின்னு,எனக்கு கஞ்சி புளிக்குழம்பு இருக்கு தின்னுக்கிறேன் என பொய் சொன்னாள்.இந்த 2 தோசையே அவனுக்கு பத்தாது இதுல பாதியை நான் துன்னுடா புள்ள கொரவயிறா படுக்கும் அதான் அவளோட எண்ணம்.

ராசா என்ன ஏமாத்திட மாட்டியே!?,
உங்கப்பா போனதுக்கப்பறம் உனக்காகதான்டா இந்த உசுரை பிடிச்சுக்கிட்டு இருக்கேன்.என்னைய ஏமாத்திடாத ராசா,வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே கிழிந்த பாயை விரித்துப் படுத்துக்கொண்டாள் கலா.
ரகு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.அந்த பாய்வாங்கி 1௦வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.இன்னும் அவள் அதை விடுவதாயில்லை.கழுத இதுல படுத்தாதான் தூக்கம் வருது என அதுக்கும் ஒரு காரணம் சொல்வாள்.

ரகு நாளையிலிருந்து வீடியோகேம் விளையாடாமல் ஒழுங்கா ஸ்கூலுக்கு போகணும் என நினைத்துக்கொண்டான்.ஸ்கூலில் முருகேசன் கூப்பிட்டபோதும் நான் வரலை இனிமேல் என்னைய தொந்தரவு பண்ணாதே என சொல்லிவிட்டான்.மூன்றுநாள் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது.அன்று கோனார் கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான் ரகு.முருகேசனும் அணியில் இருந்தான்..ரகு படிக்கும் பள்ளிக்கூட்டத்திற்கு வடக்கே 1௦ நிமிடம் நடந்தால் இந்த கிரவுண்ட் வந்துவிடும்.வீட்டிலிருந்து 3௦ நிமிடம் முன்னதாக ரகு கிளம்பினாள் கிரிக்கெட் விளையாட போகிறான் என  யூகித்துவிடலாம்.ரொம்ப சின்னதும் இல்லாமல் பெரியதும் இல்லாமல் இருக்கும் கோனார் கிரவுண்ட்.சுற்றியிருந்த மற்ற இடங்கள் எல்லாம் பிளாட் போட்டுவிற்றுவிட இப்போது மிச்சமிருப்பது இதுமட்டும்தான்.சுற்றியுள்ள பல ஏரியா பசங்களுக்கு இதுதான் சொர்க்கம்.நல்லவிலைக்கு மடிந்தால் இதுவும் கொஞ்சநாளில் வீடாகிவிடும்.அன்று ரகு விளையாடிய போது,குமார் பந்துவீசினான்.

எல்லா பாலையும் காலுக்குள்ளயே குத்துறான் மயிரு அடுத்தபால் போடட்டும் வெளிய தூக்கி அடிக்கிறேன் பாரு,என சொல்லிக்கொண்டிருந்தான் ரகு.அடுத்த பாலும் அப்படியே போட ,அது ராவுத்தர் கனியின் வீட்டு ஜன்னலை டுமீர் என சத்தத்துடன் நொறுக்கியது.ராவுத்தர் கெட்டவார்த்தைகளைத் திட்டிக்கொண்டே கிரவுண்டை நோக்கி வர எல்லாரும் ஒவ்வொரு திசையில் ஓட்டம்பிடித்தனர்.கடந்த முறை இதேபோல் பந்து அவன் வீட்டிற்குள் புகுந்ததிற்கே இன்னொரு முறை வந்தால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டிய காட்டான் அவன் ரகுவை அடிக்கவந்த ராவுத்தரை தடுத்து பணம் கொடுத்து அனுப்பியது முருகேசன்தான்.

அதன்பிறகு முருகேசனோடு அவன் அறைக்கு செல்லும்வரை ரகு எதுவும் பேசவில்லை.அவன் அறை கொஞ்சம் விசித்திரமாய் இருந்தது.பெரிய ஃபேன்,டிவி,அருகில் சிடி ப்ளேயர்,சுவரில் அடிக்கப்பட்டிருந்த ஆணியில் வித விதமாய் விலையுயர்ந்த சட்டைகள்,ஒரு ஓரமாய் தொடக் கூடாத பொருள் போல புத்தகங்கள்,சுவரில் அங்கங்கே ஆடைகளுடன் பெண்களின் படங்கள்,தலையனையைத் தாண்டி எட்டிப் பார்த்த ‘அந்த’மாதிரி புத்தகங்கள்,கதவின் மறைவில் காலி பீர்பாட்டில்கள்,என்னவென்று தெரியாத ஒரு நாற்றம்,எல்லாவற்றையும் பார்த்த போது ஒரு +2 படிக்கும் மாணவனின் அறையில் அமர்ந்திருப்பதாய் ரகுவால் உணரமுடியவில்லை.

சிலமணிநேர மௌனத்தை ரகுவே உடைத்தான்.உங்க அப்பா,அம்மா எங்க இருக்காங்க?

அவங்கல்லாம் மேலபோய் ரொம்ப நாளாச்சு,என்றான் ரகுவை பார்க்காமலே.

எப்படி இப்படி செலவு பண்ற.உனக்கு பணமெல்லாம் எப்படி கிடைக்குது?

சம்பாதிக்கிறேன் செலவுபண்றேன்,சிப்ஸ் பாக்கெட்டை ரகுவிடம் நீட்டினான் முருகேசன்.

சம்பாதிக்கிறியா? என்ன வேலைக்கு போற? என பெரிதான கண்களுடன் கேட்டான் ரகு.

எனக்கு ஒருத்தன் ஒருபொருளை கொடுப்பான்,அதைநான் பக்கத்துல இருக்க காலேஜ்ல பசங்களுக்கு வித்துட்டு வருவேன்.காலையிலே சீக்கிரமா போனா 1 மணியில் வித்திடும்.நானும் ஸ்கூலுக்கு வந்துடுவேன்.கை நிறைய காசு கொடுக்கிறானுங்க.நானும் சந்தோசமா இருக்கேன் என்றவன்,பட்டென ரகுவைப் பார்த்து நீயும் இந்த வேலைக்குவறியா? என்றான்.
ரகு இதை எதிர்பார்க்கவில்லை.

ஒன்னும் யோசிக்காத ரகு.இது சும்மா பார்ட் டைம்தான்.1 மணிநேரம் வேலைபார்த்தா 3௦௦ ரூபாய்.நீயும் எவ்வளவு கஷ்டப்படுற,வேற பசங்களை நான் கூப்பிட்டுக்கலாம் ஆனா நீ என் பிரண்டு.அதனாலதான் நீ நல்லாயிருக்கனும்ன்னு நினைக்கிறேன்.
எதை விற்கணும்?,மெல்லிய குரலில் கேட்டான் ரகு.

அது உனக்கெதுக்கு.?.இவ்வளவு நாளா வேலை பாக்குற எனக்கே அது தெரியாது.பொட்டலமா இருக்கும்.1 பொட்டலம் 2௦௦ரூபாய் வித்துட்டு காசை ஓனர்கிட்ட கொடுத்தா நமக்கு காசு.நல்ல பொருளா இல்லைனா எல்லா பசங்களும் முண்டி அடிச்சிட்டு வருவாங்களா!.
ரகுவிற்கும் அது பிடித்திருந்தது.வேலைக்குப் போய் காசு சேர்த்தா அம்மாவையும் வேலைக்கு அனுப்பவேணாம்.இந்த 3௦௦ ரூபாய்க்கு அம்மா 1௦ நாட்கள் மாங்கு மாங்கு’ன்னு வேலைபார்க்கவேண்டும்.

சரி நானும் வேலைக்கு வரேன் என தலை அசைத்தான்,வரப்போகிற பிரச்சனையை தெரியாமல்.

முருகேசனும் வெள்ளிக்கிழமை காலையில் 7மணிக்கே என் ரூமுக்கு வந்துடு என சொல்லி அனுப்பிவைத்தான்.ரகு போனபிறகு பக்கத்துக் கடை போனில் யாரிடமோ பேசினான் முருகேசன்.
‘ஆமா பார்ட்டி சிக்கிட்டான்.அன்னைக்கு சொன்னேனே அவன்தான்.
.......................................
சரி அண்ணாச்சி என்று போனை வைத்தான்.

வெள்ளிக்கிழமையும் வந்துவிட்டது.இடைப்பட்ட இரண்டு நாட்களில் முதல்நாள் சம்பாதிக்கும் 3௦௦ரூபாய்க்கு என்னவெல்லாம் செய்யலாம் என மணிக்கணக்கில் யோசித்துக்கொண்டிருந்தான்.முதலில்  ரங்கம்மக்கா கடையை விட்டுட்டு வேற நல்ல கடையில சாப்பிடனும் என நினைத்து சிரித்துக்கொண்டான்.
வெள்ளிக்கிழமை காலையில் மாரியம்மன் கோவிலுக்கு போவதாக சொல்லிவிட்டு சீக்கிரமே கிளம்பினான் ரகு.புள்ளைக்கு நல்லபுத்தி வந்திருச்சு என கலாவும் காலண்டர் பிள்ளையாருக்கு உக்கி போட்டுக்கொண்டிருந்தாள்.

ரகு 7மணிக்கெல்லாம் முருகேசன் அறைக்கு சென்றுவிட்டான்.அறையில் அவனைக் காணாமல் முருகேசா! முருகேசா! என கூப்பிட கக்கூசிலிருந்து ‘ரூம்ல இருடா வரேன்’ என்று சத்தமும் நாற்றமும் சேர்ந்து வந்தது.

அறையை ஒருமுறை நோட்டமிட்டான்.அன்றைவிட கூடுதலாக கொஞ்சம் நாற்றம்.கட்டிலில் சாய்ந்தபோது தலையணையிலிருந்து விலகி ‘அந்த’ புத்தகம் ரகு கண்ணில்பட்டது.ஆடையேதும் இல்லாமல் நிர்வாணமாக அவனைப் பார்த்து சிரித்தாள் அவள்.என்ன இப்படி சிரிக்கிறா ரகு உள்ளே நினைத்துக்கொண்டே  அதை தலையணைக்கு அடியிலேயே வைத்துவிட்டான்.

முருகேசன் வந்தபிறகு வண்டியில் இருவரும் கிளம்பினர்.எங்க போறோம்?

கீழராஜவீதி என சொல்லிக் கொண்டே புல்லட்டைத் திருகினான்,முருகேசன்.ரகுவை நிற்கச் சொல்லிவிட்டு ஒரு சந்திற்குள் நுழைந்தான் அவன்,சுற்றி காய்கறி குப்பைகள்,பக்கத்தில் இரும்புபட்டறைக் கடைகள்,ஆள்நடமாட்டம் இல்லாத இந்த இடத்திற்கு ரகு இதற்கு முன்னர் வந்ததில்லை.ஒருவேளை வார சந்தையாக இருக்கலாம் என நினைத்துக்கொண்டான்.அந்த புல்லட்டின்மீது உட்காந்துக்கொண்டு டூர்டூர் என ஓட்டுவதுபோல பாவனைசெய்துபார்த்தான்.சம்பாதிச்சு முதலில் இதுமாதிரி வண்டி ஒன்னுவாங்கணும் என நினைத்துக் கொண்டான்.டூர் டூர்.தூரத்தில் முருகேசன் கையில் பெரியபையுடன் வந்துகொண்டிருந்தான்.

இருவரும் மன்னர் கல்லூரியின் பின்பக்கமுள்ள புளியமரத்தை அடைந்தனர்.எப்படி பொட்டலத்தை விற்பது என சொல்லிவிட்டு வழக்கமான கஸ்டமர்களுக்கு ரகுவை அறிமுகப்படுத்தினான்.யாருக்கும் கடன்மட்டும் கொடுத்திடாதே என அட்வைஸ் பண்ணிட்டு 1/2மணியில் வேறுகாலேஜ்க்கு போகணும்னு கிளம்பிவிட்டான்.எல்லாவற்றையும் விற்றுவிட்டு பணத்தைக் கொடுத்தபிறகு சொன்னபடியே 3௦௦ரூபாயும் கொடுத்தனுப்பினான் முருகேசன்.

அம்மாவிற்கும் சேர்த்து 5 நெய்தோசை வாங்கிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தவனுக்கு அதிர்ச்சி.கலா வீட்டில் நெஞ்சை பிடித்துக்கொண்டு வலியால் துடித்துக்கொண்டிருந்தாள்.ஆட்டோவில் அவளை அழைத்துச் செல்லும்வரை அவனுக்கு ஒன்றும்புரியவில்லை.வேகமா ஒட்டுனா வேகமா ஒட்டுனா என்று மட்டும் சொல்லிக் கொண்டிருந்தான்.சுயநினைவில்லாமல் கலா வலியால் துடித்துக்கொண்டிருப்பதை பார்த்தபோது வாழ்க்கையில் இத்தனை அதிகமாக அவன் பயந்ததில்லை.செலவு அதிகமாகும் என்று தெரிந்தும் கவிதா மருத்துவமனையில் சேர்த்தான்.காலையில் கலா விழித்தபோதுதான் ரகுவிற்கு உயிர்வந்தது.கலாவிற்கு முதல்-ஹார்ட் அட்டாக்ன்னு டாக்டர்  சொல்லியிருக்கிறார்.’இது எதுக்கு உடம்ப பாத்துக்காம இப்படி கஷ்டப்பட்டுக்குது என ரகு நொந்துகொண்டான் அதற்கான காரணம் அவன்தான் என்று தெரிந்தும்.

டாக்டர்ட சொல்லிட்டு வாடா கெளம்புவோம் வேலைக்கு வேற கெளம்பனும் என சொல்லிக்கொண்டே எழுந்தாள் கலா,
பேசாம கம்முன்னு இருமா!இன்னும் 2 வாரத்துக்கு நீ இங்கதான் இருக்க.உடம்ப பாத்துக்காம என்ன வேல கிடக்குது உனக்கு.
பேசாம கவர்மென்ட் ஆஸ்பத்திரியிலேயே சேர்த்துருக்கலாம்ல.இங்க காசு அத்துக்கிட்டு போகும்.மாரியம்மன் கோயில்ல உண்டியல்ல 5 ரூபாய் போட்டுட்டு துன்னூர் பூசிகிட்டா சரியாகிடப் போகுது இதுக்கு போய் இங்க இழுத்துட்டு வந்துட்டியேன்னு புலம்பிக்கொண்டிருந்தாள் கலா.

ஹாஸ்பிடல் செலவுக்காக முருகேசனிடம் 1௦௦௦௦ கடன் வாங்கியிருந்தான் ரகு.இதற்காக ஒருமாதம் சம்பளம் வாங்காமல் வேலைபார்க்கவேண்டும் என்று முருகேசன் கண்டிஷன் போட்டிருந்தான்.தினமும் காலையில் ரகு கலாவிற்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்துவிட்டு அந்தந்த வேளை மாத்திரைகளை எடுத்துவைத்துவிட்டு கிளம்புவான்.செலவிற்கு என்னடா பண்ற என்றதற்கு வாத்தியாரிடம் கடன் வாங்கியிருக்கேன் என சொல்லி வைத்திருந்தான்.

1 மாதம் உருண்டோடியது.கலாவும் தேறி வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டாள்.தினமும் காலையில் பொட்டலம் விற்றுவிட்டு 1௦ மணிக்கு பள்ளிக்கு சுவரேறி செல்வது பழக்கமாகிவிட்டது ரகுவிற்கு.

அன்று எப்போதும்போல ரமணி மாமி வீட்டில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்தாள் கலா.(கலாவின் பக்கத்துக் குடிசைக்காரி கோமதி மூச்சிரைக்க ஓடிவந்தாள்) அக்கா ரகுவை சுட்டுட்டாங்களாம்.போலீஸ் பிடிக்கவந்தபோது ஒடுனதால சுட்டுட்டாங்களாம்.இப்ப ஆஸ்பத்திரியில வச்சிருக்காங்களாம் பதற்றத்துடன் சொல்லிமுடித்தாள் கோமதி.இவனை ஏன் போலீஸ் புடிக்கவரனும்? தப்பிச்சு ஓடுற அளவுக்கு ரகு என்ன தப்பு பண்ணுனான்? கலாவிற்கு தலையே வெடித்துவிடும் போல் இருந்தது.வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே ஆஸ்பத்திரியை நோக்கி ஓடினாள்.

வேகமாக உள்ளே நுழைந்தவளை படாரென தடுத்தான் அங்கிருந்த பெரியமீசை போலீஸ்.காலிலே விழுந்து கலா கெஞ்ச 5 நிமிஷம்தான் எனக் கூறிவிட்டு மாத்திரை வாங்க வைத்திருந்த 5௦௦ரூபாயையும் வாங்கினான் அந்த இறக்கமுள்ள போலீஸ்காரன்.

உள்ளே ரகு அசைவற்று கிடந்தான்.இத்தனை காலமாய் சீராட்டி வளர்த்த மகன் இப்படி கிடைக்கிறானே என்பதை நினைத்தவுடன் கண்ணீர் பீரிட்டுவந்தது.ஒரு ஏழை அம்மாவாக அவளால் அழ மட்டுமே முடிந்தது.அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.அவளது பார்வை ஓரிடத்தில் குத்திட்டு நின்றது,அவனது வலதுகால் எங்கே? என் மகனோட கால் எங்கே?.
ஐயோ! என் ராசா உன்ன இப்படி பார்க்கவா நான் உசுர பிடிச்சுக்கிட்டு இருந்தேன்,இரத்தமெல்லாம் கண்ணீராய் வந்தது அவளுக்கு.வெளியே நின்ற போலீஸ்காரன்,என்னமா கத்துற இன்ஸ்பெக்டர் வர்ற நேரம் என வெளியே இழுத்துவந்தான்.

என் மகன் சுடுற அளவுக்கு அப்படி என்னையா தப்பு பண்ணிட்டான் சேலையில் மூக்கைத் துடைத்துக்கொண்டே கேட்டாள்.
படிக்கிற புள்ளைகளுக்கு கஞ்சா வித்துக்கிட்டு இருந்தா புடிக்காம உன் புள்ளைக்கு அவார்டா கொடுப்பாங்க,பிடிக்கபோனபோது தப்பிச்சு ஓடபார்த்தான் அதான் சுட்டுட்டோம்.எதோ முக்கியமான நரம்பில் குண்டு பட்டுடிச்சாம்.காலை எடுக்கலைனா உயிருக்கு ஆபத்துன்னு சொன்னதால காலையெடுக்க வேண்டியதா போச்சு.ஒழுங்கா ஓடாம இருந்திருந்தா காலாவது மிச்சம் இருந்திருக்கும் அத்தனை சாதாரணமாக சொன்னான் அந்த பெரியமீசை.

சட்டென தொப்பையை சரிசெய்துவிட்டு ஐயா வர்றார் அமைதியா இரு என்றான் அவன்.
ஐயா.வயது 35ஐ தாண்டாது.நல்ல நிமிர்த்தலான நடையுடன் வந்தார்.இவதான் அந்த  பயலோட அம்மாவா என கேட்டுக்கொண்டே அவன் முளிச்சிட்டானா என விசாரித்தான்.

என்னமா உன்மவன் ஓடவிட்டான் தெரியுமா!?,எனக்கே மூச்சு வாங்கிட்டு இவர் நிலமைய யோசிச்சுபாரு.அதான் சுட்டுட்டோம் என்று சொல்லி சிரித்தான் அவன்.கலாவிற்கு அவன் சட்டையைப் பிடித்து இப்ப என்மகன் கால் போச்சேடா அதுக்கு என்னடா பதில் சொல்லபோற என சண்டையிட வேண்டும் போலிருந்தது.பல்லை கடித்துக்கொண்டாள்.
நினைவுவந்தபோது,அவன் ஆஸ்பத்திரியில் இருப்பதும் மெல்ல அவனுக்கு உணர்ந்தது.

காலையில் வழக்கம்போல பொட்டலம் விற்றுக்கொண்டிருந்தபோது அங்கு முருகேசன் வேகமாக பைக்கில் வந்தான்.போலீஸ் தேடுறாங்க வேகமாக பைக்கில் ஏறு என சொல்லிக்கொண்டே பைக்கைத் திருகினான்.போலீஸ் அருகே வந்துகொண்டு இருப்பது முன்கண்ணாடியில் முருகேசனுக்கு தெரிந்தது.உடனே ரகுவைப் பார்த்தான்.அவன் வியர்வை வழிய பதற்றத்துடன் கண்ணை மூடியபடி இருந்தான்.சடாரென ரகுவைத் தள்ளிவிட்டுவிட்டு வண்டியை விரட்டினான்.

ரகுவிற்கு ஒன்றும் புரியவில்லை.மூங்கில்காட்டின் குறுக்கே புகுந்து ஓடத் துவங்கினான்.ஓடாத நில்லு! என போலீஸ் சொன்னதெல்லாம் அவன் காதில் விழுந்ததாக தெரியவில்லை மனம் சொன்னதெல்லாம் ஓடு ரகு நிற்காதே!
படார்...ரகுவிற்கு சுரீரென்றது.சுட்டுவிட்டான் படுபாவி.நொண்டியபடியே காலைப் பிடித்துக்கொண்டு ஓடினான்.மறுபடியும் படார்...அதே காலில் மறுபடியும் சுட்ட உடனேயே விழுந்துவிட்டான்.அதன்பிறகு இப்போது ஆஸ்பத்திரியில்.

 அழுதுகொண்டிருந்த கலா,ரகு விழித்ததைப்பார்த்து அருகில் வந்தாள்.

என்னைய மன்னிச்சிடுமா!,நான் தப்பு பண்ணிட்டேன் என அம்மாவை அணைத்துக்கொள்ள முனைந்தபோதுதான் தனக்கு வலதுகால் இல்லாததை அவனால் உணர முடிந்தது.

தனது எதிர்காலம் எல்லாம் இப்படி சிதைந்துபோனதை நினைத்தபோதே அவனுக்கு வாழ்வதே அர்த்தம் இல்லாததுபோல தோன்றியது.
அடுத்தநாள் மருந்தை எடுத்துக்கொண்டு ஒருநர்ஸ் வந்தாள்.ஊசிபோட்டுவிட்டு ஒரு சீட்டை அவனிடம் திணித்துவிட்டு சென்றாள்.”என்னைப்பற்றி போலீஸ் கேட்டால் எதுவும் சொல்லிவிடாதே.உங்க அம்மாவை நான் கவனிச்சுக்கிறேன்-முருகேசன்” என அதில் எழுதியிருந்தது.என் அம்மாவை பார்த்துக்க இவன் யார் நான் இருக்கும்போது,ரகுவிற்கு கோபம்வந்தது.போலீசிடம் அவர்களைப் பற்றிய எல்லா உண்மைகளையும் சொல்லிவிட்டான்.நீதிமன்றத்தில் பார்த்தபோதுதான் அன்று முருகேசனைத் துரத்தியவர்கள் அவனது கூட்டாளிகள்தான் என்று தெரிந்தது ரகுவிற்கு.முருகேசனுக்கும் அவன் கூட்டாளிக்கும் 3 ஆண்டு சிறைதண்டனை கிடைத்தது.ரகுவிற்கு விதிக்கப்பட்ட 6 மாத தண்டனையும் மருத்துவமனையிலேயே கழிந்தது.

வீட்டிற்கு வந்தபிறகும் அவன் வெளியே எங்கும் செல்லவில்லை.ஒற்றைக்காலுடன் வெளியே சென்று யாருடைய அனுதாபத்தையும் பெற்றுக்கொள்ள அவன் விரும்பவில்லை.கலாவிடமும் அவன் அதிகம் பேசுவதில்லை.இனி பள்ளிக்கும் செல்ல முடியாது.இந்த நொண்டி என்ன வேலைக்கு செல்வது.? அம்மாவின் கனவுகளைக் கலைத்துவிட்டோம் என்ற குற்றஉணர்ச்சியே அவனைக் கொன்றுக்கொண்டிருந்தது.
கலாவிற்கும் மகனை இப்படி உம்மென்று பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை.அவனருகில் உட்காந்து கொண்டு உங்கப்பாவை நான் எப்ப மொதமொதலா பாத்தேன் தெரியுமா!! என தன்னுடைய காதல்கதையை சொல்லுவாள்.எழுந்து நடனமாடுவாள்,ரங்கம்மா அக்கா கோபப்பட்டால் எப்படி கத்துவாள் என நடித்துக்காட்டுவாள்.அவனை சகஜமாக்க அவள் ஏதேதோ செய்வாள்,எல்லாம் செய்துவிட்டு அவன் தூங்கியபிறகு போர்வையைப் போர்த்திக்கொண்டு அழுவாள்.

அன்று பையனுக்கு எல்லாம் சரியாகிவிட வேண்டும் என மாரியம்மன் கோயிலில் அங்கபிரதஷணம் செய்துவிட்டு கலைத்து படுத்திருந்தவளைப் பார்த்தபோதுதான் அம்மாவிற்காகவாது மீண்டும் வாழவேண்டும் என்ற எண்ணம் ரகுவிற்கு வந்தது.தூங்கி எழுந்தவளைப் பார்த்து சிரித்தான் ரொம்ப நாளைக்குப்பிறகு.

அம்மா நமக்கு சொந்தமா என்ன இருக்கு?

இந்த வீடும் நீயும் தான்டா என்சொத்து என கலா சிரித்தாள்.

வீட்டிலேயே சின்னமா ஒரு பெட்டிக்கடை ஆரம்பிக்கலாமா அம்மா?

என்னடா திடீர்ன்னு?

இனிமே என்னால என்னமா பண்ணமுடியும்.ஸ்கூலுக்கும் என்னால இந்த காலோட படிக்கமுடியும்ன்னு தோணல.ராமமூர்த்தி ஸ்கூல்,எம்.சி ஸ்கூல்,கவர்மென்ட் ஸ்கூல் பசங்க எல்லாம் நம்பவீட்டு வழியாத்தான் போறாங்க இங்க கடை வச்சா நல்லா வியாபாரம் ஆகும்மா .

ரகுவின் நம்பிக்கையான பேச்சில் கலாவிற்கும் நம்பிக்கை வந்தது.

மாமியிடம் 2௦௦௦ கடன் வாங்கி கடையைத் தொடங்கினான்.கடையென்றால், வீட்டுவாசலில் சின்னதாக ஒரு பெட்டியில் மிட்டாய்களை வாங்கி விற்கத் தொடங்கினான்.தேன் மிட்டாய்,கல்கோனா,சூடமிட்டாய்,கொய்யாமிட்டாய்,மீன் மிட்டாய்,எள்ளுருண்டை............இப்போதெல்லாம் அவன் ரகு இல்லை,ரகு மாமா.ஆமாம் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் அப்படித்தான் கூப்பிடுகிறார்கள்.
  “ரகு மாமா தேன் மிட்டாய் எடுத்துத்தா”

வருடங்கள் வேகமாக ஓடின.வியாபாரம் பெருக கடையையும் பெரிதாக அலமாரிகளுடன் கட்டினான்.கடையில் கிடைக்கும் பணமே போதுமானதாக இருக்கு என ரகு அம்மாவை வேலைக்கு போகவேண்டாம் என சொல்லிவிட்டான்.

வியாபாரம் முடித்துவிட்டு கதவில் சாய்ந்தபடி எதையோ யோசித்துக் கொண்டிருந்தான் ரகு.

என்னடா யோசிச்சிட்டு இருக்க? என்றாள் கலா.

கடைக்கு என்ன பேரு வைக்கலாம்ன்னு யோசிச்சிட்டு இருந்தேன்மா..
என்ன பேரு டா..!?
“கலா மிட்டாய்க் கடை”